Advertisement

தண்ணீர்..தண்ணீர்...

தண்ணீர்..தண்ணீர்... 

ஒரு குழாயில், ஒரு நொடிக்கு, ஒரு சொட்டு தண்ணீர் வீதம் வீணாகச் சென்று கொண்டிருந்தால்... ஓர் ஆண்டில் எத்தனை லிட்டர் வீணாகும் தெரியுமா?
'ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகும்' என்கிறது, ஒரு புள்ளி விவரம்!
ஒரு குழாயில் மட்டுமே இப்படியென்றால், பற்பல காரணங்களால் எத்தனை கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கே இப்படி தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்க... பக்கத்து ஊரில், பக்கத்து மாவட்டத்தில், பக்கத்து மாநிலத்தில், பக்கத்து நாட்டில் என்று எங்கெங்கும் வறண்ட தொண்டைகளும், உலர்ந்த நாக்குகளும், வெடித்துக் கிடக்கும் நிலங்களும் வேதனையுடன் காத்துக்கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால், தண்ணீர் விரயத்தைத் தவிர்த்து விடுவோம்.
'தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் விழும் மழை நீரை சேமிப்பதற்காகத்தான், அதனருகிலேயே சிவகங்கை குளத்தை வெட்டினார், ராஜராஜ சோழன். பிற்காலத்தில், செவ்வப்ப நாயக்கர் என்பவர், சுடுமண் குழாய்கள் மூலமாக, பெரியகோயில் மழை நீரை சிவகங்கை குளத்தில் சேர்த்தார்’ என்கிறது, வரலாறு. 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர், முன்னோர். கோயில் என்றால் குளமும் சேர்ந்ததுதான். கோயில் கட்ட மண் எடுக்கும் குழியை, நீரைச் சேமிக்கும் குளமாக மாற்றியுள்ளார்கள்.
'ஏரிகள் மாவட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏரிகளை பல்லவர்கள் வெட்டினார்கள். ஒரு ஏரி நிரம்பினால், அடுத்த ஏரிக்கு நீர் வழிந்தோடி செல்லும் வகையில் அற்புதமான நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் பல்லவ மன்னர்கள்.

இப்படி குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் என்று நீராதாரங்களைப் பெருக்கினர் அன்றைய மன்னர்கள். ஆனால், 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று சொல்லிக் கொண்டு இன்றைக்கு ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவோர்... இருக்கின்ற நீராதாரங்களையெல்லாம் பட்டா போட்டுக் கொள்வதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள்!
குளத்தைக் காணோம்!
2008ம் ஆண்டு தமிழக அரசின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், மழை நீரை ஆதாரமாகக் கொண்ட 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3 ஆயிரத்து 936 நடுத்தர குளங்களும்; பொதுப்பணித்துறையின் கீழ், 5 ஆயிரத்து 276 மழை நீரால் நிரம்பும் குளங்களும்,
3 ஆயிரத்து 627 நதி நீரால் நிரம்பும் குளங்களும், 9 ஆயிரத்து 886 தனியார் குளங்களும் இருந்துள்ளன. ஆனால், ஆறு ஆண்டுகளில் இவற்றில், 40 சதவிகித குளங்கள் காணாமல் போய்விட்டன.
ஓடைகள் ஆக்கிரமிக்கப்படிருப்பதால், குளங்கள் அழிகின்றன. குளங்கள் ஆக்கிர மிக்கப்படுவதால், வயல்கள் அழிகின்றன. அதனால், வயல்கள் வீட்டுமனைகளாக மாறி, விவசாயம் அழிகிறது. மதுரையில்
39 சதவிகித குளங்களும், சென்னையில் 60 சதவிகித குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
2007-08ம் ஆண்டில் ஏரி, குளங்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்த அரசு, அடுத்த ஆண்டே (2009) 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. 'நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்' என உத்தரவு போடும் நீதிமன்றங்களே, ஏரி, குளம்... போன்ற நீராதாரங்களின் மேல் அமைக்கப்படுகின்றன. இந்த முரண்பாடுகளால் முற்றிலுமாக சிதைந்து கிடக்கின்றன, நீர்த் தாங்கிகள். கோடிக்கால் பூதங்களாக பூமியைப் பிளந்து நிற்கின்றன, சிறிதும் பெரிதுமான ஆழ்துளை கிணறுகள்.
போனது போகட்டும்... இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டாமா? அதற்கு நீர் சிக்கனத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
விவசாயிகள்தான் முதலில் சேமிக்க வேண்டும்!
இதைப் பற்றி பேசிய திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோராஜ், ''அதிகரித்துவிட்ட மக்கள்தொகையால், நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருக்கும்போது இஷ்டத்துக்கு செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டு, சிக்கனமாகச் செலவு செய்தாலே பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் சேமிக்க முடியும். பிரிட்டன் போன்ற நாடுகளில் கார்களை தண்ணீரில் கழுவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு வரையறை இல்லாததால், வாரி இறைக்கிறோம். குறிப்பாக, விவசாயிகள், நீர்ச் சிக்கனத்தை உடனடியாக கைக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக நீர் தேவைப்படுவதும் அவர்களுக்குத்தான். நீரின் தேவையை நன்கு அறிந்தவர்களும் அவர்கள்தான். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் என பாசன முறைகளில் வளர்ந்து கிடக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாரிடமெல்லாம் அதிக தண்ணீர் வசதி இருக்கிறதோ... அவர்கள்தான் இதை உடனடியாகச் செய்ய வேண்டும். இவ்வளவு கடுமையான வறட்சி காலத்திலும் இன்னும் பல இடங்களில் வாய்க்கால் பாசனத்தையே மேற்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
பயிர் அறிந்து பாசனம் செய்!
வறட்சியான காலங்களில் அதிக நீர் தேவையுள்ள பயிர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மண்ணுக்கு ஏற்ற பாசன முறைகளைக் கைகொள்ள வேண்டும். உதாரணமாக, செம்மண், மணல் கலந்த களிமண் நிலமுள்ள விவசாயிகள், குறைந்த இடைவெளியிலும் (7 நாட்களுக்கு ஒரு முறை), களிமண் பகுதி விவசாயிகள், நீண்ட இடைவெளியில் (15 நாட்களுக்கு ஒரு முறை) பாசனம் செய்ய வேண்டும். பொதுவாக, நாம் பாசனம் செய்யும் நீரில் 10% மட்டுமே நிலத்துக்குள் செல்கிறது. 90% ஆவியாகி விடுகிறது. நிறைய நீர் விட்டால்தான் பயிர் நன்றாக வளரும் என நினைப்பது தவறு. பயிரின் வயதுக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கொடுத்தாலே போதுமானது. நிலம் குளிர பாசனம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. பயிர்களின் சல்லிவேருக்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்தால் போதுமானது. 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்றார்கள், பெரியவர்கள். அது விவசாயத்துக்கும் பொருந்தும். 'பயிர் அறிந்து பாசனம் செய்’ என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டால்... நிலத்தில் நீரை உறிஞ்சுவது குறையும். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதும் குறையும்.
நிலத்தடி நீர் இத்தனை அதலபாதாளத்துக்கு போயிருப்பதற்கு முக்கியக் காரணம், ஆழ்துளைக் கிணறுகள்தான். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 50 ஆழ்துளைக் கிணறுகள் வரை இருக்கலாம். ஆனால், இன்றைக்கு 175 முதல் 200 ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதால், பூமிக்கு அடியில் உள்ள கரும்பாறைகள் உடைக்கப்பட்டு ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம், பூகம்பம் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குளங்களைப் பராமரித்தால்தான்... ஆழ்துளைக் கிணறுகள் வாழும்!
ஒவ்வொரு மாவட்டத்திலும், பூமிக்கு கீழ் உள்ள பாறைகளில் குறிப்பிட்ட அடி தூரத் தில், பாறைப் பிளவுகள் இருக்கும். உதாரண மாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 41, 84, 126, 187, 234, 315, 421, 480, 520, 570 ஆகிய அடி தூரத்தில், பிளவுகள் இருக்கும். இந்தப் பாறைப் பிளவுகளுக்கு தண்ணீர் கொடுப்பவை, திறந்தவெளி நீர்த்தாங்கிகளான குளங்கள்தான். அவற்றில் தண்ணீர் இல்லாதபோது, இந்த பிளவுகளிலும் தண்ணீர் இருக்காது. அதனால் தான், 700 அடி போனாலும் தண்ணீர் வருவதில்லை. தற்போது, ஆயிரம் அடிகள் வரை சாதாரணமாக போர் போடு கிறார்கள். இது தவறு.
மத்திய, மாநில நீர்வளத்துறைகள் பரிந் துரைக்கும் அளவு, பெரும்பாலான மாவட்டங் களில் 650 அடிதான். 'இந்த அளவுக்கு போர் போட்டாலும் தண்ணி கிடைக்கறதில்லையே அதுக்கு என்ன செய்ய..?’ என்ற கேள்வி உங்களுக்கு எழும். குளங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தால், 650 அடிக் குள்ளேயே நிச்சயம் தண்ணீர் கிடைக்கும், என்பதுதான் உண்மை.
பொதுவாக, கோடைக்காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது, பூமிக்கு அடியில் உள்ள சில வறண்டு போன ஓடைகளில் தண்ணீர் கிடைக்காது. அதையும் தாண்டி கீழே கிடைக்கும் தண்ணீர், மண்ணுடன் கலந்து சிமெண்ட் போல உருவாகி, இந்த வறண்ட ஓடைகளை அடைத்து விடும். இதைத் தவிர்க்க, தண்ணீரை உள்ளே செலுத்தி, அழுத்தம் (ஃபிளஸ்ஷிங்) கொடுத்து கழுவி, மீண்டும் தண்ணீரை வெளியே எடுக்க வேண்டும். அவசரம் கருதி பல இடங்களில் இப்படிச் செய்வதில்லை. ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள், இதை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாய நிலங்கள், வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளுக்கு அருகே மழை நீர்ச் சேமிப்பை ஏற்படுத்தினால் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும்'' என்றவர்,
''தண்ணீர் நமக்கு மட்டும் சொந்தமானதில்லை. அனைவருக்குமான பொதுச்சொத்து என்பதை மனதில் நிறுத்தினால், வருங்காலம் வளமானதாக மாற வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
- பொங்கிப் பாயும்...