Advertisement

"தாஜ்மகால்மீது தவறான பார்வை"

"தாஜ்மகால்மீது தவறான பார்வை"

உத்தரப்பிரதேச மாநில அரசு ஆண்டுதோறும் தனது மாநிலத்தின் புகழ்பெற்ற$ சுற்றுலாத்தலங்கள் குறித்து அரசு வெளியிடும் நாட்குறிப்பிலும், நாட்காட்டியிலும் படங்களுடன் பட்டியலிடப்பட்டிருக்கும்.  இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டியில் தாஜ்மகால் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை குறித்த இடங்களில் தாஜ்மகால் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் கோரக்பூர் கோரக்கேஷ்வர் மடம் (சாமியார் ஆதித்யநாத்தின் மடம்) இடம் பெற்றுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள பட்டியலில்  காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடம் என்று கூறி, மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முகலாய மன்னர் ஷாஜகான், மறைந்த  தனது காதல் மனைவியின் நினைவாக 400 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆன தாஜ்மகாலைக் கட்டினார். தாஜ்மகால் கட்டியதற்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் போர்கள் நடந்துள்ளன. ஆனால் எந்த ஒரு கொடூர மனமுள்ள மன்னர் கூட தாஜ்மகாலை தகர்க்க விரும்பவில்லை.

ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு தாஜ்மகால் மீண்டும் புதிய பொலிவு பெற்று உலகத்திற்குத் தெரியவந்தது, இதனை அடுத்து உலகின் காதல் சின்னமாக தாஜ்மகால் மாறியது. அன்றிலிருந்து இன்றுவரை உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்வது தாஜ்மகால்; இந்தியாவின் அனைத்து ஆட்சிகளும் அதனை சுதந்திரமான ஒரு சுற்றுலாத்தலமாக அறிவித்தது, ஆனால் காவியால் சிதைந்த மனமுடைய சாமியார் ஆதித்யநாத், முதல் முதலாக அது ஒரு சுற்றுலாத்தலம் இல்லை என்று அறிவித்து விட்டார்.

இந்த ஆண்டு மே மாதம் தாஜ்மகால் மேல் காவிக்கொடி ஏற்ற முயன்ற இரண்டு உத்தரப்பிரதேச பொதுப்பணித்துறை ஊழியர்களை மாநில காவல் துறை கைது செய்தது. மேலும் தாஜ்மகாலை இந்துக் கோவிலாக அறிவிக்க நீண்ட நாட்களாகவே சில இந்து அமைப்புகள் முயற்சி செய்துவருகின்றன. இந்த நிலையில் மாநில அரசே முன்வந்து தாஜ்மகாலை சுற்றுலாத்தலமில்லை என்று அறிவித்து விட்டது. இது குறித்து மாநில அரசு, தானே முன்வந்து ஒரு விளக்கமும் கொடுத்துள்ளது. அதாவது இந்திய கலாச்சார பாணியில் அந்தக் கட்டடம் இல்லாத காரணத்தால் அதை சுற்றுலாத்தலமாக அறிவிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு  இதனைக் கண்டுபிடித்த அந்த மேதைக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்களோ! (?) இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் தன்மை தாஜ்மகாலால் என்ன கெட்டுப் போய் விட்டதாம்?

பூனை, கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுமா? என்ற கதைதான் சாமியாரின் நடவடிக்கையால் நினைவிற்கு வருகிறது.

உலக சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இரண் டாமிடத்தில் தாஜ்மகால் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிலும் மதவாதக் கண்ணோட்டம் என்ற மூர்க்கக் குதிரையின்மீது பிஜேபி சவாரி செய்து கொண்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தாஜ் மகாலை சுற்றுலாத்தலப் பட்டியலிலிருந்து விலக்கிய தோடு நிற்கவில்லை. உ.பி. முதல் அமைச்சர் ஆதித்யாநாத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மடத்தின் கோயிலை சுற்றுலாத்தலத்தின் பட்டியலில் இணைத்துள்ளார். அவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புடன் எதுவும் முடிவு செய்யப்படுகிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

சில காலத்திற்கு முன்பு தாஜ்மகால் ஒரு இந்துக் கோயில் என்று கூடக் கிளப்பப்பட்டதுண்டு.

இப்படியே எதை எடுத்தாலும் சிறுபான்மையினருக்கு எதிரான மதவாதப் பார்வையுடனான அணுகு முறை யுடன் பிஜேபி செயல்படுவது அருவருக்கத்தக்கது.

ஜனநாயகத்துக்கு விரோதமானது - இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு எதிரானது. இதனைப் பொது மக்கள் பெரும் அளவில் உணர்ந்து வருகிறார்கள் - இது வளரும் போது மக்கள் மத்தியிலிருந்தே பிஜேபி கண்டிப்பாகத் தூக்கி எறியப்படும் என்பதில் அய்யமில்லை.