சளித்தொல்லைக்கு மிளகு
பனிக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் வரும். இதற்கு மிளகுதான் கைகண்ட மருந்து. குழந்தை இரவில் திடீரென எழுந்து, தொடர்ச்சியாக இருமலில் அவதியுறும்போது, நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை, இருமலால் வெளியேற்ற முடியாமல் திணறும். உடனே, தடாலடியாக கடையில் இருமல் மருந்தை வாங்கிக்கொடுப்பது தவறு. பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள் உறைய வைத்து, நோயைக் குணப்படுத்தாமல் விட்டுவிடும்.
மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து, ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுக்க, சளி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதைப்பார்த்து பயப்பட வேண்டாம். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க வேண்டாம்.