Advertisement

புது மருத்துவ கல்லூரி 2021ல் சேர்க்கை

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தெரிவித்தது. 

மதுரை, வாசுதேவா தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில், 720க்கு, 521 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் உட்பட, 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், 2020 - 21ல் துவக்கப்படும்; கலந்தாய்வு பட்டியலில் இடம்பெறும்' என, தமிழக அரசு செப்., 7ல் அறிவித்தது.

ஆனால், நடப்பு கலந்தாய்வு பட்டியலில், இப்புதிய கல்லூரிகள் இடம் பெறவில்லை. காரணத்தை அரசு தெளிவுபடுத்தவில்லை. நடப்பாண்டு மருத்துப் படிப்பு கலந்தாய்வு பட்டியலில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற வேண்டும். அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகள் துவக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, 'புதிய, 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு, மருத்துவக் கவுன்சிலிடம் இணைவிப்பு பெற வேண்டியுள்ளது. 

அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை துவங்கும்' என தெரிவித்தது.நீதிபதிகள், 'சென்னை அருகே உள்ள சில மாவட்டங்களில், புது மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். பொறியியல் கல்லுாரிகள் போல், மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விடும்' என, அறிவுறுத்தி ஒத்தி வைத்தனர்.