Advertisement

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

 ''புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 கட்டப் போராட்டம் நடக்க உள்ளது''என மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

தேனி அரண்மனைப்புதுாரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். மாநில பொருளாளர் ஜோதிபாபு வரவு - செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.மயில் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் 3100 பேர் அரசு ஊழியர்கள் 2400 பேர் என 5500 பேர் மீது '17 பி' சார்ஜ் மெமோ வழங்கப்பட்டுள்ளது. எந்தவித நிபந்தனையும் இன்றி அதனை திரும்ப பெற வேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 கட்டப் போராட்டம் நடக்க உள்ளது.



அதன்படி வட்டார கல்வி அலுவலகங்கள் முன் டிச. 17ல் ஆர்ப்பாட்டமும் ஜன. 9ல் மாவட்ட தலைநகரங்களில் தர்ணாவும் மார்ச்சில் சென்னையில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஒன்றுகூடி உண்ணாவிரதமும் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.துணைப்பொதுச்செயலாளர் கணேசன் நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம் பாண்டியன் ராமர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநில துணைத்தலைவர் ரஹீம் செய்திருந்தார்.