'தமிழகத்தில், தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கல்லுாரிகளில் இறுதியாண்டு வகுப்புகள், வரும், 7ம் தேதி முதல் துவங்க, அனுமதி அளிக்கப்படுகிறது' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, நவ., 28ம் தேதி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.அவர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால், நோய் தொற்று விகிதம், 6.55 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்து நாட்களாக, நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு, 1,600க்கும் குறைவாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 50 ஆயிரத்தில் இருந்து, 11 ஆயிரமாக குறைந்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், நேற்று நள்ளிரவு முடிய, தமிழகம் முழுதும் பிறப்பிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு உத்தரவு, மேலும் சில தளர்வுகளுடன், டிச., 31 நள்ளிரவு, 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள், வரும், 7ம் தேதி முதல் துவங்க அனுமதிக்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம்
* மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள், வரும், 7ம் தேதி முதல் துவங்கலாம்; அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட, அனுமதி அளிக்கப்படுகிறது
* நடப்பு கல்வியாண்டில் சேரும், புதிய மாணவர்களுக்கான வகுப்புகள், பிப்., 1 முதல் செயல்படும்
* வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு பயிற்சிக்காக மட்டும், நீச்சல் குளங்கள் செயல்படலாம்
* வரும் நாட்களில், நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, 14ம் தேதி முதல், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்
* சுற்றுலா தலங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது
* உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம், 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக, 200 பேர் பங்கேற்கும் வகையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள், டிச., 1 முதல், 31 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், சென்னையில் போலீஸ் கமிஷனரிடம், முன் அனுமதி பெற வேண்டும். வரும் நாட்களில், நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த, தளர்வுகள் அளிப்பது குறித்து, உரிய முடிவு எடுக்கப்படும்
* புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் தவிர, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு, தற்போது நடைமுறையில் உள்ள, 'இ -- பதிவு' முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி, ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.