Advertisement

செமஸ்டர் தேர்வு கட்டணம் எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்தக் கூடாது' என, கோரிய மாணவர்களின் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த, ஹரிகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய, அரசு உத்தரவிட்டது. 

நடத்தப்படாத தேர்வுகளுக்கு, மாணவர்களிடம் இருந்து கட்டணம் செலுத்தும்படி, அண்ணா பல்கலை கோரியது.'பாஸ்' அறிவிப்புதேர்வு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே, 'பாஸ்' அறிவிப்பு வந்தது. கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை.

கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தாமல், தேர்வு முடிவை அறிவிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, மாணவர்கள் பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன. தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டாலும், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார். அண்ணா பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், வழக்கறிஞர் எம்.விஜயகுமார் ஆஜராயினர்.

வழக்கை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: செமஸ்டர் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க, பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, அரசு அனுமதி அளித்து உள்ளது. 

தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை, அனைத்து பல்கலைகளும் வசூலித்துள்ளன.

 148 ரூபாய் கட்டணம்அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற, 378 கல்லுாரிகள், மாணவர்களிடம் இருந்து பெற்ற தேர்வு கட்டணத்தை செலுத்தி விட்டன.பெரும்பாலான கல்லுாரிகள், மாணவர்கள், தேர்வு கட்டணத்தை செலுத்தி விட்டனர்; தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன.

 அதனால், நீதிமன்றத்தை அணுகியவர் களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பது பொருத்தமாக இருக்காது. தேர்வு நடத்தப்பட வில்லை என்றாலும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 

தற்போதைய கட்டத்தில் குறுக்கிடுவது, குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், ஒவ்வொரு பேப்பருக்கும், 148 ரூபாய் கட்டணம் என்பது, அதிகமானதாக இல்லை.

 எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் இருந்து அதை பெற்று, அண்ணா பல்கலைக்கு, நான்கு வாரங்களில் கல்லுாரிகள் செலுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.