Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு இன்றுடன் முடியும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த முறை கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்கவும், கூடுதல் அலுவலர்களை பணியில் அமர்த்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் 2016ம் ஆண்டு மே 16ம் தேதி நடந்தது. பின்னர் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!


இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும். கடந்த முறை தமிழகத்துடன் சேர்த்து புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த 5 மாநிலங்களில் கடைசி கட்டமாகத்தான் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த முறையும் இந்த 5 மாநிலங்களுக்கு ஒன்றுபோல தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகிறது. கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் 6,10,44,358 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஆண்கள் 3.01,12,370, பெண்கள் 3,09,25,603, மூன்றாம் பாலினம் 6,385 பேர். பின்னர் கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.


மேலும், அலுவலகம் செல்வோர் வசதிக்காக கடந்த மாதம் 21,22 (சனி, ஞாயிறு) மற்றும் இந்த மாதம் 12, 13 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. அதைத் தவிர இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிதாக பெயர் சேர்க்க 4 லட்சத்து 81 ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெயரை நீக்க 1,13,930 பேரும், திருத்தம் செய்ய 73,292 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்யும் பணிகள் இன்றுடன் முடிகிறது. அதன்பின்னர் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


இந்தப் பணிகளுடன் சேர்ந்து வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் இறுதி செய்யப்பட்டு விடும். அதன்பின்னர், வாக்குச்சாவடிகளை அமைத்தல், தேர்தல் அலுவலர்களை நியமித்தல், முன்னதாக தேர்தல் விதிமுறைப்படி 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றுகிறவர்களை மாற்றுதல் போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் செய்து முடிக்கும். தற்போது கொரோனா காலம் என்பதால், பீகாரைப் போல தமிழகத்திலும் அதிகமான வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் கூடுதல் அலுவலர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைப்பதன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களையும் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசார் மற்றும் மத்திய போலீசாரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


பின்னர் மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்புக்களை தேர்தல் ஆணையம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலம் என்பதால் பள்ளிகளை இன்னும் திறக்கவில்லை. இந்த ஆண்டு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த முறை தேர்தல் நடந்தபோது ஏப்ரல் மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இதனால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக மே மாதம் தேர்தல் நடந்தது. இப்போது பள்ளிகள் இல்லை என்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளதாகவும், அதற்குள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் இதே காலக்கட்டத்தில் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.


* தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ல் முடிவடைகிறது. 


* ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்.


* கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு. 


* வாக்குச்சாவடி பணியில் மத்திய அரசு ஊழியர்களையும் பயன்படுத்த பரிசீலனை.


* தமிழகத்துடன் சேர்த்து புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல்.