தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர் , தீயணைப்பாளர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான எழுத்து தேர்வு டிச . , 13 ல் நடைபெற உள்ளது .
இதற்கான தேர்வுமுறை , தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் மாதிரியில் மாணவர்களின் நலன் கருதி ' தினமலர் ' நாளிதழ் கடந்த 68 நாட்களாக மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்கி வருகிறது . இது கடந்த சில வருடங்களாக கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது . தேர்வுமுறை எழுத்து தேர்வு முதலில் நடைபெறும் . மொத்தம் 80 வினாக்கள் இருக்கும் . கொள்குறி வகையில் தேர்வு நடைபெறும் . இதில் பொது அறிவு 50 மற்றும் உளவியல் வினாக்கள் இருக்கும் . இதற்கு மொத்த மதிப்பெண்கள் 80 .
எழுத்து தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை . ஆகையால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் . நேர மேலாண்மை மொத்த தேர்வு நேரம் 80 நிமிடங்கள் . உளவியல் பகுதியில் மட்டும் 30 வினாக்கள் இருப்பதனால் நேர மேலாண்மையை முறையாக பின்பற்றினால் தான் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியும் . முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு விடையளிக்கவும் , பிறகு சந்தேகமான கேள்வி களுக்கு யோசித்து விடையளிக்கலாம் .
அதிலும் குறிப்பாக முதன்முறையாக இத்தேர்வை எழுதும் மாணவர்கள் குறைந்தது ஐந்து மாதிரி தேர்வுகளை நேரக் கட்டுப்பாடுடன் எழுதிப் பார்க்க வேண்டும் . அப்போது தான் நேர மேலாண்மையின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும் . தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் புதிய பகுதிகளை படிப்பதை விட ஏற்கனவே படித்த பகுதிகளை நினைவுப்படுத்துதல் சிறந்தது .
கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை கண்டிப்பாக பார்க்கவும் . அதில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்கவும் . கட் - ஆப் மதிப்பெண் கட் - ஆப் மதிப்பெண்ணை பற்றி இப்போதே எதுவும் யோசிக்க வேண்டாம் . ஏனெனில் பொதுவாக கட்ட ஆப் மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது நடைபெற இருக்கும் தேர்வின் வினாத்தாளின் கடினத்தன்மையை பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் .
எனவே நீங்கள் முந்தைய ஆண்டு கட் - ஆப் மதிப்பெண்ணோடு ஒப்பீடு செய்ய வேண்டாம் . நம்முடைய எண்ணம் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளிப்பதில் மட்டும் இருப்பது நல்லது . பொது அறிவு பொது அறிவு பகுதிக்கு 6 முதல் 10 வரை உள்ள பள்ளி சமச்சீர் புதிய பாடப்புத்தகங்கள் போதுமானது . புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படிக்காமல் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை மட்டும் படித்தால் போதுமானது . ஒவ்வொரு பாடத்திற்கு பின்பு கேட்கப்பட்டுள்ள வினாக்கள் , புத்தகத்தில் தனிமைப்படுத்தி காட்டியுள்ள துணுக்கு செய்திகள் , “ உங்களுக்கு தெரியுமா " என்ற தலைப்பில் உள்ள செய்திகள் , மேலும் அட்டவணைப்படுத்தி கொடுக்கப் பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும் .
வரலாற்று நிகழ்வுகளை காலவரிசைப்படி படித்து நினைவு படுத்துதல் நன்று . முக்கிய போர்கள் நடந்த ஆண்டு , இடம் , யார் யாருக்கு இடையில் நடைபெற்றது போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் . அறிவியல் பகுதிகளில் உள்ள முக்கிய விதிகள் , உபகரணங்கள் , கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானிகள் பெயரை நன்கு நினைவு படுத்தவும் . உலோக கலவைகள் , முக்கிய தாதுக்கள் , அமிலம் , காரம் , உப்பு மற்றும் தனிமவரிசை அட்டவணை தெரிந்து கொள்ளவும் . மனித நோய்கள் , வைட்டமின்கள் , ரத்த செல்கள் பற்றி கவனம் செலுத்தவும் . கணித பாடத்தில் உள்ள முக்கிய சூத்திரங்களை தேர்வு வரை திரும்ப திரும்ப நினைவு படுத்தவும் . “ தன்னால் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும் ” என்ற உயர்ந்த எண்ணத்துடனும் , தன்னம்பிக்கையுடனும் , திட்டமிட்டு தேர்வை அணுகினால் நாமும் காவல் துறையின் காக்கி உடையை அலங்கரிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை