Advertisement

குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும், வெப்பநிலை குறைந்தபட்ச அளவை விட மிகவும் கீழிறங்கும் என இந்திய வானிலை மைய இயக்குனர் எச்சரித்துள்ளார்.

குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை


வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில் திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டு தோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும், பகலில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.



மேலும் இது பற்றி இந்திய வானிலை மைய இயக்குனர் மிருதுஞ்சய் மோகபத்ரா கூறியதாவது: இந்த பருவத்தில் வட இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும். குளிர் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேற்கு கடலோரம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்ச அளவை விட அதிகமாக இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வடக்கு, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கிந்தியாவின் சில துணை பிரதேசங்களில் வெப்பநிலையானது குறைந்தபட்ச அளவை விட குறைவாக இருக்கும். அக்டோபர் மாதமே பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை குறைந்திருந்தது. இவ்வாறு கூறினார்.


2016-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை மையமாது குளிர்கால வானிலை அறிக்கைகளை வெளியிடுகிறது. தற்போது முதல் முறையாக குளிர்கால எச்சரிக்கையை வானிலை மையம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு குளிர்காலம் ஆனது ஓரளவு வெப்பமானதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.