10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 1
அரசு பொதுத் தேர்வு - 2024
பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம்
தமிழ் – மாதிரி வினாத்தாள் – 1
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன் ; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
2. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
3.மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க. “ கண்ணும் கருத்தும் “
அ) வேகப்படுத்துதல் ஆ) கற்பனை செய்தல்
இ) முழு ஈடுபாட்டுடன் செய்தல் ஈ) ஆற்றில் இறங்குதல்
4. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி – இச்செய்யுள் அடியில் இடம் பெற்றுள்ள எண்ணுப் பெயர்களின் தமிழ் எண்ணைத் தேர்க.
அ) க000 ஆ) ங00 இ) அ00 ஈ) எ000
5. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
6. சிரித்துப் பேசினார் – இத்தொடருக்குரிய அடுக்குத் தொடரை தேர்க.
அ) சிரித்துக் கொண்டே பேசினார் ஆ) சிரிப்பதால் பேசினார்
இ) சிரித்துச் சிரித்துப் பேசினார் ஈ) சிரிப்புடன் பேசினார்
7. உயிரைவிடச் சிறப்பாக பேணிக் காக்கப்படும் – பொருளுக்கேற்ற திருக்குறள் அடியைத் தேர்க
அ) நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று ஆ) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
இ) உயிரினும் ஓம்பப் படும் ஈ) எய்துவர் எய்தாப் பழி
8. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
9. ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயரைத் தேர்ந்தெடுக்க.
அ) இலா ஆ) பெப்பர் இ) வேர்டுஸ்மித் ஈ) வாட்சன்
10. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்___
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
“ எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு,
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்”
12) இப்பாடலை இயற்றியவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வைரமுத்து ஈ) சுரதா
13) ‘ லயத்துடன் ‘ – பொருள் தருக.
அ) சீராக ஆ) வேகமாக இ) அழுத்தமாக ஈ) மெதுவாக
14. சீர் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) நெருப்பு - தருமாறு ஆ) அவித்துவிடாதே – மடித்துவிடாதே
இ) பாட்டுகிறோம் - கூறுகிறோம் ஈ) சக்தி – குறைந்து
15) பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எழுதுக
அ) நெருப்பு - நீடித்து ஆ) அதனை - அவித்து
இ) பாட்டுகள் – பாடுகிறோம் ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களை எழுதுக.
17. திருக்குறள் பொருள்களுக்கேற்ற வினாக்கள் எழுதுக.
அ. ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருக்க வேண்டும்.
ஆ. உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
18. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
19. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக..
20. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
21. “ செயல் “ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கீழ்க்காணும் தொடர்கள் இடம் பெறும் வகையில் பொருத்தமான தொடர்கள் அமைக்க.
அ) வரப்போகிறேன் ஆ) கொஞ்சம் அதிகம்
23. வருந்தாமரை – இச்சொல்லைப் பிரித்துப் பொருள் எழுதுக.
24. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
25. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகியத் தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
26. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக..
27. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோளைக் குறிப்பிடுக.
28. கலைச்சொல் தருக:- அ) STORM ஆ) PHILOSOPHER
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. ஜெயகாந்தன் தம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்தரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘ தர்க்கத்திற்கு அப்பால் ‘ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
30 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
சங்கப்பாடல்களின் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று இலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர் என்றும் பாடப்பட்டுள்ளது.
அ) அரசன் எதனைப் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்?
ஆ) அரசனின் அறநெறி ஆட்சிக்கு யார் உதவினர்?
இ) அரசனின் கடமையாக இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிடுக.
31. சோலைக்காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் உரையாடல் அமைக்க.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
33. “ சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது “ - இடஞ்சுட்டிப் பொருள் எழுதுக.
34. அடிபிறழாமல் எழுதுக
அ) “ சிறுதாம்பு“ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல் (அல்லது )
ஆ) “ நவமணி வடக்க யில் “ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
36. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37. தன்மை அணியை விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக ( அல்லது )
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற உன் தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
( அல்லது )
ஆ.. மழை வெள்ளத்தால் வீழ்ந்த மரங்களை அகற்றவும், பழுதடைந்த மின் விளக்குகளைச் சரிசெய்யவும் வேண்டி, மாநகராட்சி அலுவலருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
40. படம் உணர்த்தும் திருக்குறள் கருத்தை கவினுற எழுதுக.
41. பாரதியார் நகர், வ.உ.சி.தெரு, நாமக்கல் – 5 என்ற முகவரியில் வசிக்கும் இளவேந்தன் என்பவரின் மகள் நிறைமதி, அரசு உயர்நிலைப் பள்ளி,ஏழூர், நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை நிறைமதியாகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
42. அ) இன்சொல் வழி நடப்பதால் உண்டாகும் நன்மைகள் எவையேனும் ஐந்தினையும், தீயசொல் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் ஐந்தினையும் பட்டியலிடுக. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க.
i) Tommorrow is often the busiest day of the week – Spanish Proverb
ii) Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein
iii) Language is the road map a culture it fells you where its people come from and where they are going – Rita Mea Brown
iv) Its is during our darkest moments that we must focus to see the light - Aristotle
v) Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் எனப் பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர், அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளின் ஒன்றாகக் கருதப்படுகிறது. வீட்டிற்கு வந்தவருக்கு, வறிய நிலையிலும் எவ்வழியேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல்மீன் கறியும், பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது.
(I) விருந்து குறித்து தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?
(ii) விருந்தோம்பல் குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவது யாது?
(iii) நம் முன்னோர்களின் மகிழ்ச்சி எதில் இருந்தது?
(iv) பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் குறித்த செய்தியை எழுதுக.
(v) பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றை எழுதுக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு விவரித்து எழுதுக
( அல்லது )
ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44. அ) அழகிரிசாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக. ( அல்லது )
ஆ) ‘ பாய்ச்சல் ‘ கதையில் அழகு தன்னை மறந்து ஆடியதைப் போன்று உங்கள் தெருக்களில் நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞரைக் குறித்து அழகுற விளக்கி எழுதுக.
45. அ) முன்னுரை – உழவே முதன்மைத் தொழில் – தமிழ்ச் சமூகத்தின் மகுடம் – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – முடிவுரை . குறிப்புகளைக் கொண்டு “ உழவுத் தொழிலின் மேன்மை “என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
( அல்லது )
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் “ போதை இல்லாப் புது உலகைப் படைப்போம் “ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பரவலான போதைப் பழக்கம் – போதைப் பழக்கத்திற்கான காரணங்கள் – போதைப் பழக்கத்தின் விளைவுகள் – விடுபடும் வழிமுறைகள் – விழிப்புணர்வு பரப்புரைகள் – நமது கடமைகள் - முடிவுரை