அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம்
தமிழ் – மாதிரி வினாத்தாள் – 6
மொழிப்பாடம் - பகுதி I - தமிழ்
கால அளவு : 3.00 மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
அறிவுரைகள் :
(1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்புகள் :
(i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
(ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15x1=15
(ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. கருணையன் என்பவர் _____________
அ) வீரமாமுனிவர் ஆ) யோசேப்பு இ) அருளப்பன் ஈ) சாந்தா சாகிப்
2. எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே _______
அ) வினைத்தொகை,பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை
இ) உவமைத்தொகை, வினைத்தொகை ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை
3 பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
4. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.
தவழும்போது ஒரு பெயர்
விழும்போது ஒரு பெயர்
உருளும்போது ஒரு பெயர்
திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன?
அ) நீர்,மழை,ஆறு,ஓடை ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம்.
இ) மாரி,கார்,நீர், புனல் ஈ) மழை,புனல்,மேகம்,நீர்
5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் (ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் (ஈ) அங்கு வறுமை இல்லாததால்
6. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.
(மலை, மழை, மேகம், ஆறு, ஏரி, குளம்)
அ. மலைமீது மழை பெய்து ஆற்று வெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.
ஆ. கருத்த மேகம் மலைமீது மழையைப் பொழிய ஆறு, ஏரி, குளம், அனைத்தும் நீரால் நிரம்பி
இ. திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு, ஏரி, குளங்களில் நிறைந்தன.
ஈ. மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.
7. ”உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்” எனப்பாடியவர் யார்?
அ) கம்பர் ஆ) தமிழழகனார் இ) பெரிஞ்சித்திரனார் ஈ) கண்ணதாசன்
8. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ. தொழிற்பெயர் ஆ. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ. முதனிலைத் தொழிற்பெயர் ஈ. வினையாலணையும் பெயர்
9 . காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
10. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.
அ) கொடிகளை ஆ) நாற்றுகளை இ) மரங்களை ஈ) மரக்கன்றுகளை
11. எர்லி மார்னிங் எழுந்து வாக்கிங் சென்று வந்து டீ குடித்த அம்மா, நீயூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். - இத்தொடரில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் வரிசையைத் தேர்க.
அ.வைகறை, நடைப்பயிற்சி, பத்திரிக்கை, தேநீர் ஆ. அதிகாலை, நடந்து, தேநீர்,பத்திரிக்கை
இ. காலை, நடை, தேநீர், செய்தி ஈ. வைகறை, நடைப்பயிற்சி தேநீர், செய்தித்தாள்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக
‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
13. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி
14. தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ. சங்கப் பலகை ஆ. கடல் இ. அணிகலன் ஈ. புலவர்கள்
15. தொழிற்பெயர் அல்லாத சொல்
அ. துய்ப்பதால் ஆ. அணிகலன் இ. மேவலால் ஈ. கண்டதால்
பகுதி – II பிரிவு - 1
குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
வினா எண் 21- க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 4x2=8
16. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :
(அ) ஆசை,சினம்,அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்
(ஆ) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘ பொருள்கோள் ‘ என்று பெயர்.
18. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் இரண்டனை எழுதுக
19. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
20. “ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொலிந்த
பெரும் காதல் மிகு கேண்மையினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
21. 'தது' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
குறிப்பு: எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5x2=10
23. பத்தியிலுள்ள பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக.
உங்களிடம் செவன் கோல்டு பிஸ்கட் உள்ளது. தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டை வைத்தால் தராசு ஈக்வலாக இருக்கும். பேலன்ஸாக ஒரு கோல்ட் பிஸ்கட் உங்கள் கையில் இருக்கும்.
24. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்" - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி. அதன் இலக்கணம் தருக.
22. கவிதையை உரையாடலாக மாற்றுக.
மகள் சொல்லுகிறாள்
அம்மா என் காதுக்கொரு தோடு – நீ அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது – நான்
சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!
தாய் சொல்லுகிறாள்
காதுக்குக் கம்மல் அழகன்று – நான் கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம் நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!
மகள் மேலும் சொல்லுகிறாள்
கைக்கிரண்டு வளையல் வீதம் – நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும் !
பக்கியென் றென்னை யெல்லோரும் – என்
பாடசாலையிற் சொல்ல நேரும் !
25. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, போரிடும் திணை குறித்து எழுதுக.
26. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ) கண்ணும் கருத்தும் ஆ) கயிறு திரித்தல்
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
எதிர்மறையாக மாற்றுக. அ. மீளாத்துயர் ஆ. புயலுக்குப் பின்
27. 'அமர்ந்தான்' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28. கலைச்சொற்கள் தருக. அ) Irrigation ஆ) Space Technology
பகுதி – III (மதிப்பெண்கள் : 18)
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2x3=6
பிரிவு -1
29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு – அது கிராமத்து உன்னதம். “ மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து “….. முக்கூடற்பள்ளு
(அ) பழைய சோறு எவ்வாறு பெயர் பெறுகிறது?
(ஆ) பழைய சோற்றுக்கு உச்சம் எது?
(இ) பழைய சோற்றினை முக்கூடற்பள்ளு எவ்வாறு கூறுகிறது?
31. ஹிப்பாலஸ் பருவக்காற்று – குறிப்பு வரைக
பிரிவு - 2
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
வினா எண் 34- க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 2x3=6
32. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்று படை எவ்வாறு காட்டுகிறது?
33. ஒழுக்கம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைக் கூறுக
34. அடிபிறழாமல் எழுதுக.
(அ) "விருந்தினனாக " எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடலை எழுதுக (அல்லது)
(ஆ) "தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு -3
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும் 2x3=6
35. வழுவமைதி என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
36. தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே – நமச்சிவாயர் - ஏதேனும் மூன்று நயங்களை பாராட்டி எழுதுக
37. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5x5=25
38. (அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடு ஒப்பிட்டு எழுதுக. (அல்லது)
(ஆ) ”பொருட்செல்வம் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது” எனும் கூற்றினை வள்ளுவர் வழி விளக்குக.
39. (அ) மாநில அளவில் நடைபெற்ற “கலைத் திருவிழாவில்” வெற்றி பெற்று வெளிநாடு சுற்றுலா செல்ல இருக்கும் உனது நண்பனை வாழ்த்தி மடல் எழுதுக. (அல்லது)
(ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40) கட்சியைக்கண்டு ஐந்து தொடர்கள் எழுதுக
41. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும் பழனி, தந்தை பெயர் சிவன் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு பாடப்பிரிவில் தமிழ்வழியில் சேர விரும்பிகிறார்..அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ் – 98, ஆங்கிலம் -90, கணிதம் -100, அறிவியல் -100, சமூக அறிவியல் – 97. தேர்வர் தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.
42. (அ) ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்.உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள். சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் யாசகம் செய்கிறோம். தொல்லை வேன்டாம் என்று கருதி, வேண்டா வெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம். நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக (அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க :
Lute music – grand – daughter - Chamber – rote –
To look up - didactic compilation -
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?
( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?
( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.
பகுதி – V (மதிப்பெண்கள் : 24)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3x8=24
43. (அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.. (அல்லது)
(ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
இக்குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
44. (அ) என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள்' என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துகாட்டுகளுடன் விளக்குக. (அல்லது)
(ஆ) ‘ அழகர்சாமியின் “ ஒருவன் இருக்கிறான் “ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
45. (அ) உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம் - இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக. (அல்லது)
(ஆ) மனித நேயமிக்க ஆளுமை ஒருவருக்கு குறிப்புகளைப் பயன்படுத்தி நினைவிதழ் ஒன்று உருவாக்குக.
முன்னுரை – என் இளமைப் பருவம் – விடுதலைப் போராட்டத்தில் நான் – பொது நலமே தன்னலம் – எளிமையே அறம் – நாட்டின் முன்னேற்றமே நோக்கம் – எளியோரின் அன்பே சொத்து – முடிவுரை